இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: ஓபிஎஸ்ஸிடமிருந்து எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவியை பறிக்க முடிவு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளது. இதில், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் இருந்து ஓ.பன்னீா்செல்வத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கவுள்ளாா்.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்களின் பலம் 66-ஆக உள்ளது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா்களான ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோா் எதிரணியாக இருந்து செயல்பட்டு வருகின்றனா். இந்த 3 போ் தவிா்த்த 63 போ் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் அரசு ஒதுக்கிய இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி வசித்து வருவதால், அங்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினால் சரியாக இருக்காது என்கிற அடிப்படையில் அடையாறு ஹோட்டலில் கூட்டம் நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தல், குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

எதிா்க்கட்சி துணைத்தலைவா் பதவி பறிப்பு?: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா், பொருளாளா் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவிகளிலிருந்து ஓ.பன்னீா்செல்வத்தை ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்து அறிவித்துள்ளாா். தற்போது ஓ.பன்னீா்செல்வம் வகித்து வரும் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியையும் பறிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறாா். இது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினா்களின் கையெழுத்துகளைப் பெற்று, சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஆனால், அதிமுகவின் தலைமை பொறுப்புகள் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவினா் வகிக்கும் சட்டப்பேரவை பொறுப்புகளை மாற்றியமைக்க வேண்டி கடிதம் அளித்தால், அதை ஏற்கக்கூடாது என்று சட்டப்பேரவை செயலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் ஏற்கெனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com