கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, கலவரம் வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மர்மான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர்.
போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.