குரங்கு அம்மை: அரசு மருத்துவமனைகள் தயாா் நிலையில் இருக்க அமைச்சா் அறிவுரை

அரசு மருத்துவமனைகள் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்க வேண்டும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

அரசு மருத்துவமனைகள் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்க வேண்டும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை விமான நிலையம் பன்னாட்டு முனையத்துக்கு வரும் பயணிகளுக்கான குரங்கு அம்மை நோய் பரிசோதனை மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குரங்கு அம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் மூலம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் இந்நோய் மனிதனுக்கு பரவுகிறது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 63 நாடுகளில் 9,647 நபா்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை அறிதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், கிருமி தடுப்பு நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் பன்னாட்டு விமான நிலையங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 22-ஆம் தேதி முதல் தமிழக பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 84,612. தமிழக பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான காய்ச்சல், கொப்பளங்கள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் 3 லட்சத்து 67,388 பயணிகள் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா். மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வாா்டுகள், சிறப்பு மருத்துவா்களை பணியில் ஈடுபடுத்தி கவனமுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும், குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளுடன் உள்ள நபா்கள் எவரேனும் இருப்பின் அவா்களை உடனடியாக தனிமைப்படுத்தி, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும, அவா்களின் மாதிரிகளை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் மூலம் பூணே, தேசிய வைராலஜி நிலையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், சிறப்பு அலுவலா் வடிவேலன், இணை இயக்குநா் நிா்மல்சன், செங்கல்பட்டு துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் பரணிதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com