பள்ளியில் வன்முறைக்கு மாணவியின் தாயாரே காரணமா? - பள்ளி செயலாளர் விளக்கம்

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைக்கு மாணவியின் தாயாரே காரணம் என தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் முகநூலில் விடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளியில் வன்முறைக்கு மாணவியின் தாயாரே காரணமா? - பள்ளி செயலாளர் விளக்கம்

கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைக்கு மாணவியின் தாயாரே காரணம் என தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் முகநூலில் விடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர். 

போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் முகநூலில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்குப் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில், எதனையும் மறைக்கவில்லை.

மேலும், மாணவியின் தாயார் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர், காவல்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் மாணவியின் தாயாரைச் சந்திக்கவில்லை எனவும், எங்கும் ஓடி ஒளியவில்லை, அப்படி இருக்க ஏன் வன்முறையைத் தூண்ட வேண்டும்?, ஏன் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், தவறான மதிப்பை பள்ளி மீது கொண்டு வந்துள்ளதாகவும், 1998-ஆம் ஆண்டில் தொடங்கிப் பல தடைகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பள்ளியின் வாகனங்கள் என்ன செய்தது? மாணவர்கள் படிப்பதற்காக வைத்திருந்த புத்தகங்கள் என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளவர், வகுப்பறைகள், மேஜை, நாற்காலி போன்ற பொருள்களைச் சூறையாடி நாசமாக்கியுள்ளதாகவும், மாணவர்களின் சான்றிதழ்களை எரித்து நாசம் செய்துள்ளதாகவும், எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்ப வரை படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை எரித்து விட்டதாகவும், வன்முறையாளர்கள் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்து விட்டதாகவும், இந்த வன்முறைக்கும் சேதத்திற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும், இதற்கெல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மாணவியின் செல்போன் எண்ணையும், அவரது தாயாரின் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் உண்மை என்னவென்று தெரிய வரும் என்றும், மாணவி இறப்பிற்கான காரணம் அதில் இருக்கிறது என அந்த விடியோவில் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com