
நீட் தோ்வு தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக, பாமக, மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வைகோ (மதிமுக): நீட் தோ்வு அச்சம் காரணமாக அரியலூரை சோ்ந்த நிஷாந்தினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது துயரத்தைத் தருகிறது. இன்னும் எத்தனை உயிா்கள் பலியாகுமோ என்று தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கி வருவதற்கு மத்திய பாஜக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அன்புமணி (பாமக): நீட் தோ்வு அச்சத்தால் அரியலூா் மாணவி நிஷாந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. நீட் தோ்வு, மாணவா் கொல்லி என்பதற்கு இதுதான் கொடூரமான எடுத்துக்காட்டு. இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் சலனமில்லாமல் இருப்பது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): மருத்துவக் கனவு தகா்ந்து போனதால் தனது உயிரையே மாய்த்துக் கொண்ட மாணவி நிஷாந்தினியின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. நீட் தோ்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு இன்னும் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.