மின் கட்டண உயர்வு இருக்கட்டும்: இப்படி ஒரு மோசடி நடக்கிறது அதையும் தெரிஞ்சிக்கோங்க!

செல்லிடப்பேசி தகவல்களை ரிமோட்-அக்சஸ் செயலி மூலம் திருடி ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.8.88 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி ஒரு மோசடி நடக்கிறது அதையும் தெரிஞ்சிக்கோங்க!
இப்படி ஒரு மோசடி நடக்கிறது அதையும் தெரிஞ்சிக்கோங்க!


சென்னை: மின் நுகர்வோரை குறி வைத்து ஒரு புதிய டிசைன் மோசடி அரங்கேறி வருகிறது. அதன்படி, செல்லிடப்பேசி தகவல்களை ரிமோட்-அக்சஸ் செயலி மூலம் திருடி ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.8.88 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிது புதிதாக மோசடிச் சம்பவங்கள் நாள் ஒரு பொழுதாக வளர்ந்து வருகிறது. ஒரு மோசடி குறித்து புகார் வந்து அதனை காவல்துறை கண்டறிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்குள் சில பத்து அல்லது சில நூறு பேர் ஏமாந்துவிடுகிறார்கள். மக்களிடையே விழிப்புணர்வு வருவதற்குள் அடுத்த மோசடிக்கு தயாராகிவிடுகிறது அந்த நாசக்கார கும்பல்.

இப்படி, அடுத்த வலை விரித்திருப்பது மின் நுகர்வோரைக் குறிவைத்து. இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பது குறித்து சென்னை சைபர்கிரைம் காவல்துறையினர் கூறியதாவது,

முதலில், மின் நுகர்வோரின் செல்லிடப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில், கடந்த மாத மின் கட்டணம் செலுத்தப்படாததால் உங்கள் வீட்டு மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்படும். உடனடியாக அதில் இருக்கும் எண்ணுக்கு பயனாளர் தொடர்பு கொண்டு பேசுவார். அதில் பேசும் மோசடிநபர், தான் உதவுவதாகவும், உடனடியாக ரிமோட்-ஆக்சஸ்  செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யச் சொல்லுவார். அவற்றின் பெயர்கள் டீம் வியூவர், குயிக்சப்போர்ட் அல்லது எனி சப்போர்ட் என எந்த பெயரிலும் வரும்.

அதன்பிறகு, தங்களுக்கு ஒரு சிறு தொகையை உதவி செய்ததற்காக வழங்குமாறு மோசடியாளர் வலைவிரிப்பார். அந்த தொகை ரூ.100க்கும் கீழ் இருக்கும். உடனே, பயனாளர் வங்கிப் பரிவர்த்தனை அல்லது யுபிஐ ஆப்கள் மூலம் பணத்தை அனுப்பும் போது, ரிமோட் -ஆக்ஸஸ் செயலி மூலம், பயனாளரின் வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளும் மோசடியாளர், ஒருசில பரிவர்த்தனைகள் மூலம் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை சப்தமில்லாமல் காலி செய்துவிடுவார்.

இந்த பணப்பரிவர்த்தனைகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகே, பயனாளர் தான் ஏமாற்றப்பட்டதை அறிவார். இதுபோன்ற சைபர் கிரைம்களில் சிக்கி பணத்தை இழப்பவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சைபர்கிரைம் குற்றங்கள் நடந்த உடனே புகார் வரப்பெற்றால், உடனடியாக எந்த வங்கிக் கணக்குக்கு பணம் பரிமாற்றம் நடந்ததோ அது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வங்கிக் கணக்கு முடக்கி, இழந்த பொருள் அல்லது பணம் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். காலதாமதம் இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஆனால், ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட பிறகு அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால், அந்த பணத்தை மீட்பது எளிதல்ல என்கிறார்கள் காவல்துறையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com