9 நாள்களாக பிணவறையில்: கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்

கடந்த ஒன்பது நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
9 நாள்களாக பிணவறையில்: கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்
9 நாள்களாக பிணவறையில்: கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்


சென்னை: இரண்டு உடற்கூறாய்வுகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த ஒன்பது நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள சம்மதிக்க வேண்டும். நாளை காலை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மாணவியின் உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ் கூறியிருந்த நிலையில், மீண்டும் 12 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தங்களது மகளின் உடலை நாளைக்குள் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நாளை காலை 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, நாளை மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் மாணவியின் இறுதிச் சடங்கை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி மாணவி சடலத்தை மறு உடற்கூறாய்வு செய்வது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது தந்தைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனியாமூா் பள்ளி மாணவி மரணமடைந்ததையடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கில் 3 அரசு மருத்துவா்கள் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.

தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் உயா்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, வியாழக்கிழமை காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரிய மனு மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலைப் பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை விசாரணை தொடங்கியபோது, முதல் உடற்கூறாய்வுக்கும் இரண்டாவது உடற்கூறாய்வு அறிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, இரண்டாவது உடற்கூறாய்வு அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். 

உடற்கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இரண்டு முறை உடற்கூறாய்வு செய்யும் விடியோக்களையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் நீதிபதி, 'மாணவியின் உடலை பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள்? அவரது உடலை வைத்து பந்தயம் காட்டாதீர்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் என்ன தாமதம்? ஒவ்வொரு முறையும் பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள். அமைதியாக தீர்வு காண வேண்டும். மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது பெற்றோருக்கு தெரியாதா? என்று நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு சமூக ஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்புகின்றன. இந்த விவகாரத்தில் அனைவரும் தங்களை நீதிபதியாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். 

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறது. கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை விரைந்து நடத்துங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிறகு, நாளை தங்களது மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com