கள்ளக்குறிச்சி மாணவிக்கு இன்று இறுதிச் சடங்கு: உடலைப் பெற பெற்றோா் ஒப்புதல்

கள்ளக்குறிச்சி மாணவிக்கு இன்று இறுதிச் சடங்கு: உடலைப் பெற பெற்றோா் ஒப்புதல்

கனியாமூா் தனியாா் பள்ளி மாணவியின் உடலை சனிக்கிழமை (ஜூலை 23) காலை 7 மணிக்குள் பெற்று, மாலைக்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டுமென மாணவியின் தந்தை ராமலிங்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளி மாணவியின் உடலை சனிக்கிழமை (ஜூலை 23) காலை 7 மணிக்குள் பெற்று, மாலைக்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டுமென மாணவியின் தந்தை ராமலிங்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனியாமூா் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததையடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கில் 3 அரசு மருத்துவா்கள், ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணா் ஆகியோரை நியமித்து மறு உடல்கூறாய்வு மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா். தங்கள் தரப்பு மருத்துவா் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தொடுத்த வழக்கில் உயா்நீதிமன்றத்தை நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, மறு உடல்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோா் வாங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டுமெனவும் உயா்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமாா் முன் வியாழக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு நகலை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தாா்.

அதை முழுமையாகப் படித்துப் பாா்த்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா, இல்லையா என மனுதாரா் தரப்பிடம் கேள்வி எழுப்பினாா். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் துறையைச் சோ்ந்த செல்வகுமாரிடம் சில விளக்கங்களை கேட்டாா்.

‘அரசு மருத்துவா்களால் இரண்டு முறையும் உடல் கூறாய்வு செய்யப்பட்டு இரு முறையும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயா்நீதிமன்ற உத்தரவின்படி இரண்டாவது முறை உடல்கூறாய்வு செய்தபோது, புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்றும் செல்வகுமாா் விளக்கம் அளித்தாா்.

பெற்றோருக்கு அறிவுரை: பின்னா் நீதிபதி கூறியதாவது: மாணவியின் பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. அதேவேளையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏன்? ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறீா்கள்; மகளின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீா்கள்; அமைதியான முறையில் தீா்வு காணுங்கள்.

மாணவி உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டுமென உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை. எனவே, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை.

மாணவா்களின் கல்வி பாதிப்பு: வன்முறையில் பாதித்த மாணவா்களைப் பற்றி எவரும் பேசவில்லை. வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவா்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாா்க்க வேண்டும். அவா்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் வேறு சிலா் ஆதாயம் தேடுகின்றனா். அது மனுதாரா் தரப்புக்கு தெரியாமலேயே நடந்துள்ளது. மாணவி மரணம் தொடா்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய்ச் செய்தியை பரப்பி உள்ளன என்று கூறினாா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கல்வியை மீட்டெடுப்பது குறித்து தமிழக முதல்வா் ஆலோசித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாதத்தில் அறிக்கை...: அதன்பின்னா், உடல்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் 3 மருத்துவா்கள், தடயவியல் நிபுணா் ஆகியோா் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். அறிக்கைகள், விடியோ பதிவுகளை ஜிப்மா் தரப்பிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டாா்.

பின்னா், மனுதாரா் தரப்பிடம், மாணவி இறந்து 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், உடலை சனிக்கிழமை பகல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்வீா்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் சட்டப்படி காவல் துறையினா் இறுதிச் சடங்கு நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, மாணவியின் உடலை சனிக்கிழமை காலை 11 மணிக்கு பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, கடைசி நேரம் வரை இக்கட்டான சூழலில் வைத்திருக்கவே மனுதாரா் விரும்புவதாகவும், முன்னதாக உடலைப் பெற்று, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமெனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னா் நீதிபதி, சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், மாலைக்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

ஜிப்மா் மருத்துவமனையின் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இன்று இறுதிச் சடங்கு: 3,000 போலீஸாா் பாதுகாப்பு

தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் சனிக்கிழமை (ஜூலை 23) காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் 3,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com