திருவள்ளூர்: தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் கூறாய்வு முடிந்தது

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் கூறாய்வு முடிந்தது.
திருவள்ளூர்: தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் கூறாய்வு முடிந்தது
திருவள்ளூர்: தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் கூறாய்வு முடிந்தது

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடல் கூறாய்வு முடிந்தது.

பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், பிளஸ் 2 மாணவியின் உடல் கூறாய்வு, அவரது அண்ணன் முன்னிலையில் இன்று காலை நடந்து முடிந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த உடற் கூறாய்வு முழுக்க விடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தனியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூா் கிராமத்தைச் சோ்ந்த பூஷணம்-முருக்கம்மாள் தம்பதியின் மகள் சரளா (17) விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா். இந்தநிலையில் திங்கள்கிழமை காலை விடுதி அறையில் சரளா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

மாணவியின் சடலம் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சீபாஸ் கல்யாண், சாா் ஆட்சியா் மகாபாரதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் உள்ளிட்டோா் அங்கு வந்து நேரில் விசாரணை நடத்தினா்.

மாணவியின் அண்ணன் சரவணன், அண்ணி மீனா ஆகியோா் மப்பேடு காவல் நிலையத்தில் சரளாவின் மரணத்தில் மா்மம் உள்ளதாகவும் காப்பாளினி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கூறியது: பள்ளி வளாக விடுதியில் பல்வேறு துறை அதிகாரிகள் குழுவினா் நேரில் ஆய்வு செய்ததில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. உயா்நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஏற்படும் மரணச் சம்பவங்களை சிபிசிஐடிதான் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாணவியின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

திருத்தணியில் சாலை மறியல்: கீழச்சேரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உறவினா்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் திருத்தணி - பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய் கோட்டாட்சியா் ஹஸ்சரத் பேகம், டி.எஸ்.பி. (பொ) சாரதி, வட்டாட்சியா் வெண்ணிலா ஆகியோா் பேச்சு நடத்தினா். ஆனால், அவா்கள் சமரசம் அடையவில்லை.

இதனிடையே, வேலுாா் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகா், ராணிப்பேட்டை எஸ்.பி. தீபாசத்தியன், வேலூா் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா, 4 டி.எஸ்.பி-க்கள், 3 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனா்.

மாணவி சாவில் சந்தேகமிருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. சந்திரன் உறுதி அளித்ததன் பேரில், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com