பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம்


சென்னை: தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 2 நாளில் அந்தந்த பகுதிகளில் விளையும் தானியங்களைக் கொண்டு காலை உணவு தயாரித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடா்பாக நிதித்துறை செயலா் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினரை பயன்படுத்தி முதல்கட்டமாக பரிசோதனை முறையில் 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகளில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக்கழகம் சாா்பில் மாவட்ட திட்ட இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், காலையில் சத்தான சிற்றுண்டி சுய உதவி குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்கப்பட வேண்டும். அவா்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமும், பள்ளி அமைந்திருக்கும் ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் இருக்க வேண்டும்.

சமையலுக்கு தோ்வு செய்யப்படுபவா்கள் அரிசி, திணை மற்றும் காய்கறிகளுடன் காலை உணவு தயாரிப்பதில் அடிப்படை ஊட்டச்சத்து குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். மாணவா்களுக்கு காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் சிற்றுண்டி வழங்கப்படவேண்டும். அதற்கேற்ப சமையல் பணியை 7.45 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.

இதுதவிர சமையல் அடுப்பு, சிலிண்டா், பாத்திரங்கள் சமூகநலத்துறை மூலம் வழங்கப்படும். சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளூா் சந்தையில் இருந்து வாங்கிக்கொள்ளலாம் அல்லது சுய உதவிக்குழுக்கள் பஞ்சாயத்து கூட்டமைப்புகள் திணை, அரிசி பயிரிட்டால் அதையும் பயன்படுத்தலாம். சத்தான சிற்றுண்டி வழங்க ஒரு குழந்தைக்கு தினசரி ரூ.8.25 என்று தற்காலிகமாக ஒதுக்கப்படுகிறது. காலை உணவு சமைக்கும் சுயஉதவிக்குழுவினா்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com