சமையலறை இல்லாத வீட்டில் வசிக்கிறீர்களா? காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்

சமையலறை இல்லாத வீட்டில் வசிப்போர் வணிக அலகுகளுக்கான மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மின் நுகர்வோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
மின் நுகர்வோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

சென்னை: குடியிருப்பு அலகு என்ற வார்த்தைக்கான வரையறையை தமிழ்நாடு மின்சார வாரியம் மாற்றியமைத்திருப்பதால், சமையலறை இல்லாத வீட்டில் வசிப்போர் வணிக அலகுகளுக்கான மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக மின் வாரியம், தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியிருக்கும் பரிந்துரையின்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாட்டு மற்றும் கட்டட விதிமுறைகள் 2019ன்படி, குடியிருப்பு அலகு என்பது, ஒரு தனிப்பட்ட வீடு என்பது இருப்பதற்கு, சமைக்க, தூய்மைப் பணிகளுக்கு என அனைத்து வசதிகளும் கொண்டது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரு குடியிருப்பு அலகில் சமையலறை இல்லாவிட்டால், அந்த குடியிருப்பினை குடியிருப்பு அலகு என்று வகை செய்ய முடியாது, எனவே, அந்த இடத்துக்கு குடியிருப்புக்கான மின் கட்டண விகிதம் பொருந்தாது. அதற்கு மாறாக, அந்தப் பகுதி வணிக அலகாக வரையறுக்கப்பட்டு, அதற்கு குறைந்த மின் அழுத்தம் 1டி என்ற அடிப்படையில் மின் சேவை வழங்கப்படும்.

இதற்கு உதாரணமாக, குடியிருப்பில் வாழும் ஒரு மின் நுகர்வோர், 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், அதற்கு இண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 யூனிட் மின்சாரத்துக்கான மானியம் போக, ரூ.170 மின் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு வேளை, தமிழக மின் வாரியம் வைத்திருக்கும் பரிந்துரை ஏற்கப்பட்டுவிட்டால், அதே சமையலறை இல்லாத குடியிருப்புக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.1,600 (ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்)மின் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த மாற்றம், தங்கள் குடும்பங்களை விட்டு, வெளியூர்களில் ஒற்றை அறையில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு நிச்சயம் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பல நகரப் பகுதிகளில் வாடகை அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கும் இது பாதிப்பை உருவாக்கலாம்.

தற்போது, இந்த வாடகை அறைகள் குடியிருப்புப் பகுதிகளாகவே வரையறுக்கப்படுகின்றன. இவர்களுக்கும் தற்போது வரை முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கு மானியம் கிடைக்கிறது. 

தமிழகத்தில் மின் வாரிய மூத்த அதிகாரிகள், இது பற்றி கூறுகையில், சமையலறை இல்லாத குடியிருப்புப் பகுதிகளை வணிக அலகுகள் வகையில் கொண்டு வந்து, அவற்றுக்கு 100 இலவச யூனிட்களுக்கான மானியம் பெற தகுதியில்லாதவையாக மாற்ற திட்டமிட்டிருக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

இந்த தகவல் நடுத்தர குடும்பத்தினர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு குறித்த தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் நிலையில் இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதாவது வணிக அலகுகளுக்கான பகுதிகளுக்கு தனி மீட்டர் பொருத்தப்படும்.

ஜனநாயகத்தில் குடிமக்களின் பங்களிப்பு அமைப்பின் நிறுவனர் எஸ். நீலகண்ட பிள்ளை தெரிவிக்கையில், வேலை மற்றும் படிப்புக்காக மக்கள் ஊர் விட்டு ஊர் வரும் போது, சிறிய அறைகளில்தான் தங்கியிருக்கிறார்கள். ஒரு வேளை அப்படியிருக்கும் அறைகள் வணிக அலகுகளாக மாற்றப்பட்டால், இவ்வளவு பெரிய மின் கட்டணத் தொகையை அவர்களால் எப்படி செலுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com