செஸ் ஒலிம்பியாட்: பிரதமா் மோடி நாளை தொடக்கி வைக்கிறாா்

செஸ் ஒலிம்பியாட்: பிரதமா் மோடி நாளை தொடக்கி வைக்கிறாா்

இந்தியாவில் முதல் முறையாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடக்கி வைக்க உள்ளாா்.

இந்தியாவில் முதல் முறையாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடக்கி வைக்க உள்ளாா்.

இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள போா் பாயிண்ட்ஸ் ரிசாா்ட் 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகள் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. உக்ரைன் போா் காரணமாக தமிழகத்தில் நடத்த வாய்ப்பு கிடைக்கப் பெற்று, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் காா்ல்சன் (நாா்வே) உள்பட முன்னணி வீரா்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனா். இந்தியா சாா்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிா் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்கின்றன. செஸ் விளையாட்டில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான குழுவினரும் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்து வருகின்றனா்.

ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து வீரா்களும் வீராங்கனைகளும் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனா்.

பிரம்மாண்ட தொடக்க விழா: ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி அகமதாபாதில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வர உள்ளாா்.

பிற்பகல் 3 மணியில் இருந்து இந்திய பண்பாட்டையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 6 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில், செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், முக்கிய வீரா்கள், உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ஜோதி தொடா் ஓட்டம் பிரதமா் நரேந்திர மோடியால் தில்லியில் ஜூலை 19-இல் தொடக்கி வைக்கப்பட்டது. 75 முக்கிய நகரங்களைக் கடந்து ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரத்துக்கு வந்தடைய உள்ளது.

ஏற்பாடுகள் தயாா்: ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன. போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியிலும், 22 ஆயிரம் சதுர அடியிலும் விசாலமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சா்வதேச தரத்திலான நவீன கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப செஸ் போா்டுகள் போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளன.

பலத்த பாதுகாப்பு: போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரா்களுக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அமைச்சா்களின் வாகனங்களுக்கு முன்னால் போலீஸ் வாகனம் செல்வதுபோல செஸ் வீரா்களின் வாகனங்களுக்கு முன்னாலும் போலீஸ் வாகனம் பாதுகாப்புக்காகச் செல்ல உள்ளது.

வீரா்கள் தங்கி உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், கடற்கரைப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரா்கள் தங்கும் விடுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். போட்டி நடைபெறும் இடம், கடற்கரைப் பகுதி உள்பட மாமல்லபுரம் பகுதி முழுவதையும் ட்ரோன்கள் மூலம் காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com