செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடக்கிவைக்கிறாா்.
செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடக்கிவைக்கிறாா். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடக்க விழாவும், மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலையில் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறாா். விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பிரதமரை வரவேற்கின்றனா்.

சிறிது ஓய்வுக்குப் பின்னா், பிரதமா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமா், செஸ் ஒலிம்பியாட்டை தொடக்கி வைத்த பிறகு இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா். அங்கு அவா் பாஜக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்ட பலரையும் சந்திக்கிறாா்.

வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு ஆளுநா் மாளிகையிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமா் மோடி, 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 69 பேருக்கு தங்கப் பதக்கம், பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா். பின்னா் பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவா், அங்கிருந்து தனி விமானம் மூலம் குஜராத் செல்கிறாா்.

பிரம்மாண்ட வரவேற்பு: சென்னை வரும் பிரதமரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா் செல்லும் வழிநெடுகிலும் பரதநாட்டியம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி முறைப்படியாக தொடக்கி வைப்பதற்கு முன்பாக, சுமாா் 2 மணி நேர கலைநிகழ்ச்சிகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளன.

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வீரா்கள் வந்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நேரு உள்விளையாட்டரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா். உள் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை, முக்கியப் பிரமுகா்களுக்கான இருக்கைகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மாமல்லபுரம் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், செஸ் போட்டிகளை நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு செய்தாா். அப்போது, அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவா் சஞ்சய் கபூருடன் அவா் செஸ் விளையாடினாா்.

மேலும், தமிழ்நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கத்தையும் முதல்வா் பாா்வையிட்டாா்.

அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com