கள்ளக்குறிச்சி சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை: காவல்துறை

கனியாமூா் தனியாா் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை: காவல்துறை
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை: காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளி விடுதியில் மா்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனியாமூர் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், மாணவி மரணத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், அந்த மாணவி கடந்த 13-ஆம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் உடலில் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விடுதியின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோா், உறவினா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கடந்த 17-ஆம் தேதி கனியாமூரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது தனியாா் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டன. 

உடல் கூறாய்வுக்குப் பிறகு மாணவியின் உடலை போலீஸாா் ஒப்படைத்த போது பெற்றோா்கள் வாங்க மறுத்துவிட்டனா். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவியின் உடல் மறுகூறாய்வு தொடா்பாக அவரது பெற்றோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவக் குழுவினா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.  இதையடுத்து, கடந்த சனிக்கிழமை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோா் ராமலிங்கம், சாந்தி ஆகியோா் பெற்றுக்கொண்டு, அன்றைய தினமே இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.மாணவி பயன்படுத்திய புத்தகம், பேனா உள்ளிட்ட பொருள்களும் அவருடன் புதைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com