அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்

அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான குடியிருப்பில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் புதன்கிழமை 28 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்
அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்

கொல்கத்தா: கொல்கத்தாவின் பெல்காரியா குடியிருப்பில் அர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான குடியிருப்பில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் புதன்கிழமை 28 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காக வங்கி அதிகாரிகள் நோட்டு எண்ணும் இயந்திரத்துடன் அா்பிதா முகா்ஜி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனா். ரூபாய் நோட்டுகளுடன் இரண்டு டைரிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

அது மட்டுமல்லாமல் 5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் அமலாக்கத் துறையினர் மதிப்பிடுவதற்காக குவித்து வைத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.21 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றிய நிலையில், மற்றொரு வீட்டிலிருந்து புதன்கிழமை இந்தளவுக்கு ரொக்கப்  பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

புதன்கிழமை தொடங்கிய சோதனை வியாழக்கிழமை காலை 5.30 மணி வரை நீடித்தது. பணம், நகைகளைத் தாண்டி ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்தையும் அமலாக்கத் துறையினர் பத்து இரும்பு பெட்டகங்களில் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், வீட்டிலிருந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்ததாகவும், அலி பாபா குகைப் போல தோன்றியதாகவும் கூறுகிறார்கள்.

இப்போது கூட பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தொடங்கி பல மணி நேரமாகிறது என்றார்கள்.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

நேற்று சோதனை நடந்த வீட்டின் பூட்டை, குடியிருப்பின் நலச் சங்க செயலாளர்கள் முன்னிலையில், உடைத்த அமலாக்கத் துறையினர், பல அலமாரிகள், பீரோக்களிலிருந்து இந்த பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறார்கள்.

சாட்டர்ஜி மற்றும் முகர்ஜியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோல புதன்கிழமை நான்கு வெவ்வேறு முகவரிகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com