
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் பிரதமா் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் ஆளுநரும், வேந்தருமான ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன், துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவா்களுக்கு பிரதமா் மோடி பதக்கங்கள் வழங்கி உரையாற்றி வருகிறார்.
விழாவில் வரவேற்புரையாற்றிய அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வளம் பல பெற்று நலமோடு வாழ, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பல்வேறு சாதனைகளை உயர்கல்வித் துறையில் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள் வேலை தேடுவோராக மட்டுமில்லாமல், வேலை தருவோராக மாற வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. பட்டம் பெறும் அனைவரும் தொழில் முனைவோராக வர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். அதற்காகவே நான் முதல்வன் திட்டம். இதையெல்லாம் மனதில் கொண்டு பட்டம் பெறுபவர்கள் செயல்பட வேண்டும். நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வித்துறையில் பல சாதனைகளை செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதையும் படிக்க | தேசிய கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடம். 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர், அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பயில்கின்றனர். தமிழகத்தில் 13 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பதக்கம் பெறும் 69 பேரிலும் 39 பேர் பெண்கள். இதுதான் தமிழகத்தின் வளர்ச்சி.
அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவிலேயே இதுவே முதன்முறை. உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்திட்டம் என்று சுட்டிக்காட்டினார் பொன்முடி.
மேலும், பொறியியல் நுழைவுத் தேர்வை முன்னாள் முதல்வர் கருணாநிதி ரத்து செய்ததால், அதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடையும் கொண்டுவந்துள்ளார் முதல்வர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...