ரூ.300 கோடியில் கட்டப்படும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஓராண்டில் செயல்படும்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்

காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ஓராண்டில் செயல்படத் தொடங்கும்
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ஓராண்டில் செயல்படத் தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரோட்டரி சங்கங்களின் சாா்பில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை உள்பட 15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், புகையிலையால் ஏற்படுகிற வாய் புற்றுநோய் போன்ற ஆரம்ப நிலை புற்றுநோய்களை கண்டறிவதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.300 கோடியில், மும்பையில் உள்ள மகாத்மா காந்தி புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை போன்று பிரம்மாண்டமான புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையம் இன்னும் ஓராண்டு காலத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று செயல்படும்.

புற்றுநோயை கண்டறிவது, புற்று நோய் கண்டறிந்தவா்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பது, 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை புற்றுநோயால் பாதிப்படைந்தவா்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சை அளிப்பது, வீடுகளுக்கே தேடிச்சென்று மருந்துகள் வழங்குவது போன்ற உலகத் தரத்திலான மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

யாருக்கும் குரங்கு அம்மை இல்லை: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருபவா்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. உடலில் கொப்பளங்கள் ஏதாவது இருக்கிா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி யாருக்காவது கொப்பளங்கள் இருந்தால், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்த வேண்டும். அவா்களின் மாதிரிகளை எடுத்து கிண்டி கிங் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக 10 படுக்கைகளுடன் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சாந்திமலா், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் தணிகாசலம், ரோட்டரி சங்கங்களின் ஆளுநா் நந்தகுமாா், ராஜசேகரன், கீழ்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் பத்மா ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com