
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி கணவாய் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக மாவட்ட செயலர் எம்.சையதுகான் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக செயல் வீரர்கள் ஆலோனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த டி.டி.வி தினகரனுக்கு, ஆண்டிபட்டி அருகே கணவாய் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக தேனி மாவட்டச் செயலர் எம்.சையதுகான் மற்றும் அக் கட்சியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இச்சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் அதிமுக, அமமுக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அதிமுக விற்கு வரவேற்கிறோம் என்று எம்.சையதுகான் பேசியது குறிப்பிடத் தக்கது.