முதலீடுகளே அமைதிக்கு சாட்சி! முதல்வர் பெருமிதம்

முதலீடுகள் தேடி வருவதே அமைதிப் பூங்காவாக தமிழகம் இருப்பதற்கான சாட்சி என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதலீடுகள் தேடி வருவதே அமைதிப் பூங்காவாக தமிழகம் இருப்பதற்கான சாட்சி என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள், அவற்றுக்கு அவர் அளித்த பதில்கள்:-
 கேள்வி: வேளாண்மை விரிவாக்கத் திட்டத்தில், தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் வகையில் பட்டியலின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அனைத்து விவசாயிகளையும் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
 பதில்: தற்போது, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் என அறிவித்துள்ளோம். பிற்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
 கேள்வி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். உங்களுடைய பார்வையில் கடந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி உள்ளது?
 பதில்: நானும் இருக்கிறேன் என்று மக்களுக்குச் சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கலவரம், ஜாதி, மத சண்டைகள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், வன்முறைகள் நடக்காத ஆட்சியாக இன்று வரை தொடர்கிறது.
 தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது என்ற காரணத்தினாலேயே தமிழகத்துக்கு பல்வேறு முதலீடுகளும் தேடி வரக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவே தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு சாட்சி.
 கேள்வி: அரசு ஊழியர்கள் பலர் ஒரேநாளில் ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் ஏராளமானோர் ஓய்வு பெறவும் உள்ளனர். இந்தச் சூழலில் ஓய்வு பெறும் அனைவருக்கும் பணப் பலன்கள் முழுமையாக கிடைக்குமா? ஓய்வு பெறும் வயது வரம்பு குறைக்கப்படுமா?
 பதில்: அதைப் பற்றி எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆலோசனை முடிந்த பிறகு விளக்கமாக அறிவிக்கப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
 கேள்வி: தமிழக அரசின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எப்படி போகிறது?
 பதில்: அண்ணாமலை அரசியல் செய்கிறார்; நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம் -}முதல்வர் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com