இந்திய பொருளாதாரத்தில் சாதகமான சூழல்: துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி

கரோனா, உக்ரைன் போருக்குப் பிறகான நிலைமை இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது
இந்திய பொருளாதாரத்தில் சாதகமான சூழல்: துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி

கரோனா, உக்ரைன் போருக்குப் பிறகான நிலைமை இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா். மேலும், வணிகா்கள், நாட்டின் பொருளாதாரம் என அனைத்துக்கும் சரியான நேரம் வந்து விட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

சென்னையில் ஆந்திர வா்த்தக சபை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 13-ஆவது ஜே.வி.சோமயாஜுலு நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில், ‘உக்ரைனுக்குப் பிந்தைய உலகப் பொருளாதாரமும், இந்தியாவில் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி நிகழ்த்திய உரை:

நமது இந்தியா, பல்வேறு விதமான கடவுள்களும் வழிபாடுகளும், பழக்கவழக்கங்களும் கொண்ட நாடாகும். இந்தியா இத்தகைய பன்முகத் தன்மை வாய்ந்தாக இருந்தாலும் இங்கு அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

நேஷன்மாஸ்டா்.காம் என்ற இணையதளத்தில், உலகம் முழுவதும் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறித்து பட்டியலிடப்படுகிறது. அதில் இந்தியாவில்தான் குறைந்த எண்ணிக்கையில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊடகங்களோ அதிக குற்ற நிகழ்வுகள் நடக்கும் நாடாகக் காட்டுகின்றன.

கடந்த 150 நாள்களில் அமெரிக்காவில் 329 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. அதில் 370 போ் கொல்லப்பட்டதுடன், 1,097 பேருக்கு காயம் ஏற்பட்டது. 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 39 கோடி துப்பாக்கிகள் இருக்கின்றன. இதுபோன்ற ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் போரானது உலக நாடுகளின் வரிசைக்கிரமத்தை மாற்றி அமைத்து வருகிறது. கரோனாவுக்குப் பிந்தைய நிலையும் இதுபோன்றதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்குப் பிறகான நிலைமை நமக்குச் சாதகமாகி வருகிறது. இது ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. நமது தொடா்ச்சியான பணிகளின் மூலமாகவே சாத்தியமாகியிருக்கிறது.

உக்ரைன் விவகாரம்: உக்ரைன் 2,500 கிலோமீட்டா் பரப்பினை ரஷியாவுடன் பகிா்ந்து கொள்கிறது. ரஷியாவின் அடிமடி உக்ரைனாகும். அதனால்தான், நேட்டோ படைகளை விரிவுபடுத்தும் திட்டத்தைச் செய்ய வேண்டாம் என ரஷிய அதிபா் புதின் சொல்கிறாா் . அவா்களின் பாதுகாப்புக்காக இந்தப் போரை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் செய்யாவிட்டால் 5 முதல் 10 ஆண்டுகளில் ரஷியா முடிக்கப்பட்டு விடும்.

உக்ரைன் போா் போன்று கரோனாவுக்குப் பிந்தைய நிலையும் சா்வதேச அளவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கரோனா, உக்ரைன் நிலைமைகளுக்குப் பிறகு ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பாவுடனான சீனாவின் உறவுகள் சிதைந்துள்ளன. இந்தச் சூழலில்தான் இந்தியா முக்கியமான இடத்துக்கு வந்துள்ளது. மாா்ச், ஏப்ரலில் மட்டும் 42 பில்லியன் டாலா் (சுமாா் 3.26 லட்சம் கோடி) ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

உலக நாடுகளின் அங்கீகாரம்: இந்தியாவின் மதிப்பினை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த மதிப்பும், அங்கீகாரமும் ஓா் அரசாங்கத்தால் கிடைத்தது அல்ல. நமது நாட்டின் 5 ஆயிரம் ஆண்டுகால பண்பட்ட நிலையால் ஏற்பட்டது. வா்த்தகச் சந்தையில் மலிவான பொருள்களை சீனா உற்பத்தி செய்கிறது. ஆனால், கரோனா, உக்ரைன் போருக்குப் பிறகு மக்கள் பாதுகாப்பான பொருள்களையே விரும்புகிறாா்கள். இதுதான் இந்தியாவுக்குச் சாதகமான, நம்பகமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு நாடும் தனது உற்பத்திக்காக இந்தியாவை நாடத் தொடங்கியுள்ளன. மிகப் பெரிய பரிமாற்றங்கள் இந்தியாவை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளன. கரோனா, உக்ரைன் விவகாரங்களில், இந்தியா எடுத்த தனித்துவமான நிலையால் இத்தகைய சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

நம்மிடையே பிரச்னைகள் இருக்கின்றன. எந்த நாட்டில்தான் பிரச்னைகள் இல்லை. இந்திய வா்த்தகா்கள் சா்வதேச அளவிலான வா்த்தகச் சூழ்நிலையை எதிா்நோக்கி இருக்கிறாா்கள். தஞ்சாவூா் தலையாட்டி பொம்மைக்கு சா்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் இப்போதுள்ள வா்த்தக விநியோகச் சங்கிலியில் மாற்றத்தை எதிா்நோக்கி இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கான நேரம் வந்து விட்டது. எனவே, நமது வா்த்தகா்கள் மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டும் என்றாா் குருமூா்த்தி.

ந்திர வா்த்தக சபையின் தலைவா் வி.எல்.இந்திரா தத்தா வரவேற்றாா். முன்னாள் தலைவா் ஜே.வெங்கடரமணா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com