வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் திமுக அரசு: தினகரன்

தேர்தலின்போது தமிழக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திணறி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் திமுக அரசு: தினகரன்


மானாமதுரை: தேர்தலின்போது தமிழக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திணறி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கட்சிக் கொடி ஏற்று விழாவில் சனிக்கிழமை இரவு பங்கேற்ற தினகரன் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். பின்னர் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் குரு. முருகானந்தத்தின் வழக்கறிஞர் அலுவலகத்தை தினகரன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:

"அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எப்போதுமே தமிழக மக்கள் நலனின் கோரிக்கைகளுக்காக துணை நிற்கும். அதிமுகவில் உள்ள எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு கட்சி நிர்வாகி என்ற முறையில் நயினார் நாகேந்திரன் சசிகலாவை பாரதிய ஜனதா கட்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். தேர்தலின்போது சொல்லாத வாக்குறுதிகளை எல்லாம் ஸ்டாலின் இப்போது திராவிட மாடல் ஆட்சி, ஒன்றிய அரசு என கூறி வருவது ஏற்கத்தக்கது அல்ல. 

தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற முடியாது என தெரிந்தும் பல வாக்குறுதிகளை அளித்து விட்டு தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை எனக் கூறுவது இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது எனத் தெரிகிறது" என்றார். 

முன்னதாக, கட்சி கொடியை ஏற்றி வைத்து தினகரன் பேசியதாவது: 

"தமிழகத்தில் மக்களுக்கு எதிரான அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதிமுக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்திடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு மக்களுக்கான எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் செய்யவில்லை" என்றார். 

விழாவில் அம்மி சிவகங்கை மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் குரு. முருகானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ்வரி சரவணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, மானாமதுரை நிர்வாகிகள் சுரேஷ்பாபு,நெப்போலியன், பாலாஜி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com