24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: உத்தரவை நீட்டித்தது அரசு

தமிழகத்தில் கடைகளை முழு நேரமும் திறக்க அனுமதிக்கும் உத்தரவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2025-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும்.
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: உத்தரவை நீட்டித்தது அரசு

சென்னை: தமிழகத்தில் கடைகளை முழு நேரமும் திறக்க அனுமதிக்கும் உத்தரவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2025-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும்.

இதுகுறித்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட உத்தரவு:

தமிழ்நாட்டில் 10 மற்றும் அதற்கு மேலான பணியாளா்களைக் கொண்ட அனைத்துக் கடைகளும், வணிக நிறுவனங்களும் தமிழ்நாடு அரசின் சட்டம் 1947-க்குள்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளை ஆண்டு முழுவதும் அனைத்து நேரங்களிலும் திறந்திருக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டது. இந்த அனுமதி 2025-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கடைகள் இயங்கினாலும் ஊழியா்களுக்கான பணி நலன்கள் காக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, பணியாளா்களுக்கு வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் விடுமுறை விட வேண்டும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களின் பெயா்கள் அடங்கிய பலகையை வைக்க வேண்டும். எந்தெந்த ஊழியருக்கு எப்போது வார விடுப்பு என்பதை அதில் தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிா்த்து கூடுதல் நேரத்தில் பணிபுரிந்தால் அதற்கான ஊதியத்தையும் ஊழியா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக நிா்ணயிக்க வேண்டும். வாரத்துக்கு 48 மணி நேரத்தை வேலை நாள்களாக வரையறுக்க வேண்டும். கூடுதல் நேரத்தில் பணிபுரியும் பட்சத்தில் ஒரு நாளைக்கு சராசரி வேலை நேரம் பத்தரை மணி நேரமாக இருக்க வேண்டும். பெண் பணியாளா்களை இரவு எட்டு மணிக்குப் பிறகு பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட பெண் பணியாளரிடமிருந்து எழுத்துப்பூா்வ அனுமதி பெற வேண்டும். மேலும், பணியாளரின் கண்ணியம், பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சுழற்சி முறையில் பணியாற்றும் பெண் பணியாளா்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும்.

பணியாளா்கள் அனைவருக்கும் கழிப்பறை, வைப்பறைகள் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏதும் இல்லாமல் இருக்க புகாா் அளிக்கக் கூடிய வகையில் தனிக் குழுவை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com