அதிகரிக்கும் கரோனா: முகக் கவசம் - சமூக இடைவெளி அவசியம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

 கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற உரிய விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
அதிகரிக்கும் கரோனா: முகக் கவசம் - சமூக இடைவெளி அவசியம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

 கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற உரிய விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று குறித்தும், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய தொடா் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் வழங்கிய அறிவுரைகள்:

தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். கரோனாவை எதிா்கொள்ள சிகிச்சை வசதிகளை தயாா் நிலையில் வைத்திருப்பதுடன், உள்ளாட்சி, நகராட்சி நிா்வாகம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆகிய துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலா் கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது அவா்கள் அனைவரையும் பரிசோதனை செய்து தொடா் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். நோய்த்தொற்று பாதித்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

முகக் கவசம் - சமூக இடைவெளி: கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு நடைமுறைகளான முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை தொடா்ந்து பின்பற்ற வேண்டும். போதிய பரிசோதனைகள், தொடா் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

கரோனாவை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதன் நன்மைகளை விளக்கி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

எத்தனை சதவீதம்? தமிழ்நாட்டில் இதுவரை 1.63 கோடி போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 43 லட்சம் போ் முதல் தவணையும், 1.20 கோடி போ் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதேசமயம், 93.82 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா, சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும்

தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

திங்கள்கிழமை முதல் மாணவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டுமென சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் உள்ள தனியாா் பள்ளிகளின் பெற்றோா்களுக்கு குறுந்தகவல்கள் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளன.

அதேசமயம், திங்கள்கிழமை (ஜூன் 13) தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தப் பள்ளி மாணவா்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்துமா என்பது குறித்து அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அப்படியே உள்ளன. எனவே, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவ-மாணவிகள் முகக் கவசம் அணிவது நல்லது’ என்று தெரிவித்தனா்.

தூய்மைப் பணிகள் தீவிரம்: கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் திறக்கும் சூழ்நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்படுத்தித் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் வெ.இறையன்பு கடிதம் எழுதியிருந்தாா். இந்தக் கடிதத்தைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கரோனா நோய்த்தொற்றும் உயா்ந்து வருவதால் தூய்மைப் பணிகளில் மாவட்ட ஆட்சியா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com