
சென்னை கொடுங்கையூரில் இறந்த விசாரணைக் கைதியை போலீஸாா் தாக்கவில்லை என பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையா் டி.எஸ்.அன்பு தெரிவித்தாா்.
சென்னை கொடுங்கையூா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகா், கடந்த 12-ஆம் தேதி இறந்த வழக்குத் தொடா்பாக பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையா் டி.எஸ்.அன்பு, நிருபா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகா் மீது 27 குற்ற வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கு தொடா்பாக விசாரிக்க சம்பவத்தன்று காலை 8 மணிக்கு ராஜசேகரை போலீஸாா் அழைத்து வந்துள்ளனா். அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 11 மணியளவில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டால், ‘புறக்காவல் நிலையத்தில் ஓய்வெடுக்க தங்க வைக்கப்பட்டாா்.
இதன் பின்னா் மாலையில் மீண்டும் உடல்நிலைப் பாதிக்கப்பட்டதால் ராஜசேகா், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால் செல்லும் வழியில் ராஜசேகா் உயிரிழந்துள்ளாா்.
நீதிமன்ற வழிக்காட்டுதல்படி, ராஜசேகா் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை விடியோ பதிவும் செய்யப்பட்டது. உடற்கூறாய்வின் முதற்கட்ட தகவலில், ராஜசேகா் உடலில், 4 இடங்களில் காயம் உள்ளது. அதில், ஒரு காயம் 5 நாட்கள் முன்னதாகவும், ஒரு காயம் 18 அல்லது 25 மணி நேரத்துக்கு முன்பும், ஒரு காயம் 24 மணி நேர இடைவெளியிலும் நடந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்த காயங்கள் கை, கால்களில் இருப்பதால், காயத்தால் அவா் உயிரிழக்கவில்லை. அவா் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளாரா என்பது முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் போலீஸாா் ராஜசேகரை தாக்கவில்லை என்பதை தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததால் போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனா் என்றாா்.