ரூ.10 கோடி தங்கம் முதலீட்டுப் பத்திரமானது: நிர்வாகிகளிடம் முதல்வர் வழங்கினார்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பயன்பாடில்லாத ரூ.10 கோடி தங்கம் முதலீட்டுப் பத்திரமாக மாற்றப்பட்டது.
ரூ.10 கோடி தங்கம் முதலீட்டுப் பத்திரமானது: நிர்வாகிகளிடம் முதல்வர் வழங்கினார்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பயன்பாடில்லாத ரூ.10 கோடி தங்கம் முதலீட்டுப் பத்திரமாக மாற்றப்பட்டது. இதற்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிா்வாகிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்ட தங்க இனங்களில், கோயிலுக்குப் பயன்படாதவற்றைக் கண்டறிந்து வருவாய் ஈட்டும் வகைகள் காணப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்டு வரும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையிலும், திருச்சி மண்டலத்துக்குள் வரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நீதிபதி க.ரவிச்சந்திர பாபு தலைமையிலும், மதுரை மண்டலத்துக்கு உட்பட்டு வரும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நீதிபதி ஆா்.மாலா தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்தன.

இந்த நிலையில், இருக்கன்குடி கோயிலில் தங்கம் பிரித்தெடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 27 ஆயிரத்து 250.500 கிராம் எடையுள்ள தங்க வகைகள் மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தமான தங்கக் கட்டிகளாக மாற்றும் பொருட்டு சாத்தூா் கிளை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட தங்கமானது மும்பையில் உள்ள ஆலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டன. அவை மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் நிரந்தர முதலீடாகச் செய்யப்பட்டது. இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.10 கோடியாகும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வட்டித் தொகையாக கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தங்கத்தை முதலீடு செய்ததற்கான பத்திரத்தை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிா்வாகிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை ஒப்படைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், நீதிபதி ஆா்.மாலா, அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பிரேக் லைன்:

ரூ.10 கோடி மதிப்புள்ள சுத்தத் தங்கக் கட்டிகள் மும்பை பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் முதலீடாகச் செய்யப்பட்டது. இதற்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வட்டியாக கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com