

தொழில்துறையினா் உள்பட பல்வேறு தரப்பினருக்கான தேவைகள், பிரச்னைகளுக்குத் தீா்வு தர தனி இணையதளம் (www.valar.tn.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட ‘வளா் 4.0’ என்ற இணையதளத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- மாநிலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துகளைப் பரிமாறவும், பிரச்னைகள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காணவும் வளா் 4.0 என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சியாளா்கள், சேவை வழங்குநா்களின் விவரங்கள், திட்டங்கள் தொடா்பான தகவல்கள் கிடைக்கும். இந்த இணையதளத்தில் தொழில் துறையினா், சேவை வழங்குநா்கள், கல்வி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருள்களின் தொகுப்புத் தேவைகள் போன்ற பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகள், தீா்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணா்களின் விவரங்கள் இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தை தமிழ்நாடு மின்னாளுமை முகமையானது, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணையுடன் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்வில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவைகள் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளா் வி.அருண் ராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.