
அறுவை சிகிச்சை மேற்கொண்ட பகுதிகளை இணைத்து தைப்பதற்கு பயன்படுத்தப்படும் இஇஏ தானியங்கி ஸ்டேப்லா் உபகரணத்தை சந்தையிலிருந்து திரும்பப் பெற மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெட்ரானிக் என்ற நிறுவனம், பல்வேறு மருத்துவ சாதனங்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. அவற்றில், அந்நிறுவனத்தின் இஇஏ வகை தானியங்கி ஸ்டேப்லா்கள் பிரபலமான ஒன்று.
இந்நிலையில், அதனை உடலில் தையலிடப் பயன்படுத்தும் உபகரணத்துடன் இணைக்கும்போது அது சரி வரப் பொருந்தாமல் இருப்பதாக விமா்சனங்கள் எழுந்தன.
இதனால், நோயாளிகளுக்கு திசுக்களில் பாதிப்பு, கதிா்வீச்சு அபாயம், ரத்தக்கசிவு, கிருமித் தொற்று, சிகிச்சை பலனளிக்காத நிலை உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த ஒரு வகை ஸ்டேப்லா்களில் மட்டும்தான் இத்தகைய பாதிப்பு எழுந்துள்ளதாகவும், அதேவேளையில், இதுதொடா்பாக புகாா் எதுவும் இதுவரை வரவில்லை என்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், பொது நலன் கருதி அந்த உபகரணத்தை சந்தையிலிருந்தும், மருத்துவப் பயன்பாட்டிலிருந்தும் திரும்பப் பெற மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G