
கந்துவட்டி புகாா் தொடா்பாக கடந்த 7 நாள்களில் 89 வழக்குகள் பதியப்பட்டு, 32 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கந்துவட்டியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க தமிழ்நாடு காவல்துறை “ஆப்ரேஷன் கந்துவட்டி” என்ற அதிரடி நடவடிக்கையை கடந்த 8-ஆம் தேதி முதல் எடுத்து வருகிறது. இதில் கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு காவல்துறையினா் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்து, புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில், தமிழகம் முழுவதும் 124 கந்து வட்டி, மீட்டா் வட்டி தொடா்பான புகாா் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டன. அதில் 89 புகாா் மனுக்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய 32 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள புகாா்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
22 கந்து வட்டி குற்றவாளிகளின் வீடுகளிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூா்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுக்கள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G