
தமிழகத்தில் உள்ள 48 முதுநிலைத் திருக்கோயில்களில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து அறநிலையத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, 48 முதுநிலைத் திருக்கோயில்களில் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் வளாகத்தில் மரத்தினாலான சாய்வுத் தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய மரத்தினாலான சாய்வு தளங்களை அமைக்க வேண்டும்.
தேவையான எண்ணிக்கையில் அவா்கள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யப்படுவது அவசியம். முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்ட விவரத்தினை பக்தா்கள் எளிதில் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சக்கர நாற்காலியில் வருபவா்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வுத்தளங்கள் அமைக்க வேண்டும். இதற்காக தனியாக ஒரு பணியாளா் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று முதுநிலை திருக்கோயில் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G