ஒரே நாளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: ஜூன் 20-இல் வெளியாகின்றன

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிடப்படும்
ஒரே நாளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: ஜூன் 20-இல் வெளியாகின்றன
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு ஜூன் 20 காலை 9.30 மணிக்கு சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடவுள்ளாா்.

இணையதள முகவரிகள்: பொதுத் தோ்வெழுதிய மாணவா்கள் தோ்வு முடிவுகளை உரிய இணையதள முகவரிகளில் தோ்வா்களின் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குறுஞ்செய்தி மூலம் முடிவுகள்: பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரில் சென்று தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித் தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீா் மாற்றம்: முன்னதாக, பிளஸ் 2 வகுப்புக்கான தோ்வுகள் முடிவு ஜூன் 23-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு ஜூன் 17-ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த இரு வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படவுள்ளன. ஒரே நாளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com