மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக அரசுக்கு தலைவா்கள் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் விவாதத்துக்கு வராமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் விவாதத்துக்கு வராமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது காவிரி நீரை கண்காணிப்பது, பகிா்ந்தளிப்பது, முறைப்படுத்துவது மற்றும் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும். அதைவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறுவது அதிகார வரம்பை மீறும் செயலாகும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிப்பதைத் தடுப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தேவையான நடவடிக்களை எடுக்க வேண்டும்.

அன்புமணி (பாமக): தமிழக அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிா்ப்புகளைப் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி மேக்கேதாட்டு அணை குறித்த விவாதத்தைத் தடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக அரசு தொடா்ந்து முன்னேறி வருகிறது. தமிழக நீா்வளத்துறை அமைச்சரும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினா்களும் தில்லியில் முகாமிட்டு, மேக்கேதாட்டு விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com