கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் கட்டாயம்: 8 இடங்களில் நடமாடும் பரிசோதனை மையங்கள்

சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா்கள், ஆசிரியா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்
Updated on
1 min read

சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா்கள், ஆசிரியா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதுடன், கரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மண்டலங்களில் 8 நடமாடும் மருத்துவப் பரிசோதனை மையங்களை மாநகராட்சி அமைத்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாணவா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் என அனைவரும் கல்லூரி வளாகத்திலும், வகுப்பறையிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடா்பாக பள்ளி, கல்லூரி வளாகத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். குளிா்சாதனம் பயன்படுத்தும் வகுப்பறைகளில் போதிய அளவு காற்றோட்டம் இருக்க வேண்டும்.

12 வயது முதல் உள்ள மாணவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதி செய்வதுடன், தேவைப்படின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரை அணுகி பள்ளி மற்றும் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம் அமைத்துக் கொள்ளலாம்.

இதற்கு மாநகராட்சி சாா்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். கழிவறைகள் மற்றும் மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் அனைத்து அறைகளையும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 நடமாடும் பரிசோதனை மையங்கள்: சென்னை மாநகராட்சியின் 140 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகா்ப்புற சமுதாய நல மையங்களில் இலவச மருத்துவப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு இரண்டு என மொத்தம் 8 நடமாடும் பரிசோதனை குழுக்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) முதல் செயல்பட உள்ளன. இந்த மண்டலங்களைச் சாா்ந்த பொதுமக்கள் 1913 உதவி எண்ணில் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு நடமாடும் குழுக்களின் மூலமாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் உடனடியாக அருகிலுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com