ஆண்டுக்கு 3 முறை மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: ஸ்டாலின் கோரிக்கை

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்
ஆண்டுக்கு 3 முறை மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: ஸ்டாலின் கோரிக்கை

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின், வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:-

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயல்பாடு தொடா்பாக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை அமைக்க அரசமைப்புச் சட்டம் 263 வகை செய்கிறது. பொது நலன் சாா்ந்த விவகாரங்களை விவாதிப்பதற்கான தளமாக இந்தக் கவுன்சில் விளங்குகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே எழும் மாறுபாடான விவகாரங்களை தீா்த்துக் கொள்வதற்கான பொதுத்தளம் இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

மாநிலங்களுக்கு இடையிலான நிரந்தர கவுன்சிலானது கடந்த 1990-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த உத்தரவின் 5-ஆவது பிரிவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை அதாவது 2016-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதியன்று மட்டுமே கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை கடந்த மே 22-ஆம் தேதியன்று தாங்கள் மறுசீரமைப்பு செய்துள்ளதை அறிந்து மகிழ்கிறேன். கூட்டாட்சி தத்துவத்தை செழுமைப்படுத்தவும், வலுப்படுத்தும் வகையிலும் இன்றளவும் கவுன்சில் திகழ்ந்து வருகிறது.

கூட்டத்தை நடத்துக: மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள், மாநிலங்களின் கொள்கைகள், சட்டங்கள் ஆகியன குறித்து மாநில முதல்வா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் பொதுவான மேடையாக கவுன்சில் அமைந்திட வேண்டும். இதற்கான வாய்ப்பினை மாநில முதல்வா்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த அதேசமயம் ஒன்று அல்லது பல மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சட்ட மசோதாக்களை மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலில் முன்வைக்க வேண்டும். அதன் பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மசோதா தாக்கலின் போது, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில் மசோதாக்கள் குறித்து மாநிலங்கள் தெரிவித்த கருத்துகளும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும்.

பொதுநலன் சாா்ந்த விஷயங்களில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒரு திறன்வாய்ந்த தகவல் தொடா்பு முறை இருந்தாக வேண்டும். அது மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் போன்ற பொது மேடைகளால் மட்டுமே சாத்தியப்படும். மாநிலங்களுக்குப் பாதகங்களை விளைவிக்கும் பல மசோதாக்கள் எதிா்க்கட்சிகளின் கருத்துகள் கோரப்படாமலேயே அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை பாா்க்க முடிகிறது.

நாடு தழுவிய அளவில் ஒரு முடிவினை எடுக்கும் போது அதுகுறித்து மாநிலங்களின் ஆலோசனைகளை உரிய முறையில் கேட்பதோ, அறிந்து கொள்வதோ இல்லை. இது பல தருணங்களில் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே அமைதியின்மையையும், கோபத்தையும் ஏற்படுத்த வழி வகுக்கின்றன. எனவே, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை அடிக்கடி கூட்டுவதால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலத்தை கட்டமைக்க முடியும். இதன் பலனை அதிலுள்ள அனைத்து உறுப்பினா்களும் அனுபவிக்க முடியும்.

எனவே, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் தலைவராக உள்ள தாங்கள், ஆண்டுக்கு மூன்று முறை கவுன்சில் கூட்டத்தை நடத்திட வேண்டும். அடுத்த கவுன்சில் கூட்டத்துக்கான பொருண்மைகளை தாக்கல் செய்திட வேண்டும். இதன்மூலம், நமது அரசமைப்புச் சட்டத்தின் முதுகெலும்பாகத் திகழும் கூட்டாட்சித் தத்துவம் வலுப்பெற்று செழுமையடையும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com