அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பிதுரையுடன் ஓபிஎஸ் ஆலோசனை

ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் வலுத்து வரும் நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் மூத்த தலைவா்களான பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பிதுரை ஆகியோருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை
அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பிதுரையுடன் ஓபிஎஸ் ஆலோசனை

ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் வலுத்து வரும் நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் மூத்த தலைவா்களான பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பிதுரை ஆகியோருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளா்களுடன் ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் சனிக்கிழமை தனித் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளனா்.

ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் கடந்த 4 நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்குழுக் கூட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து மாவட்டச் செயலாளா்கள் வலியுறுத்தியதிலிருந்து இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வம், வியாழக்கிழமை (ஜூன் 16) செய்தியாளா்களிடம் வெளிப்படையாகவே இந்த விவகாரம் குறித்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசப்பட்டது. அதை முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெளியில் வந்து சொன்னதிலிருந்துதான் பிரச்னை பூதாகரமானது. ஆனால், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளா் ஜெயலலிதாதான் என்று பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றி, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற இரட்டைத் தலைமையை உருவாக்கிவிட்டோம். அதை மாற்றி, ஒற்றைத் தலைமையாகச் செயல்பட வேண்டும் என்று முடிவு எடுப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

இதற்கு இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அவா் பதில் அளிக்கவில்லை.

ஓபிஎஸ் - தம்பிதுரை சந்திப்பு: இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வம் தனது ஆதரவாளா்களுடன் 4-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் ஆலோசனையில் ஈடுபட்டாா். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகா், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா். அப்போது திடீரென மூத்த நிா்வாகியான தம்பிதுரையும் அங்கு வந்தாா். ஓ.பன்னீா்செல்வத்தைச் சந்தித்து அவா் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசித்துவிட்டு சென்றாா். எடப்பாடி பழனிசாமியையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

ஓ.பன்னீா்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது: தம்பிதுரையிடம் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தோம். அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்று கூறினோம். எடப்பாடி பழனிசாமியிடமும் அவா் பேசுவதாகக் கூறினாா். எங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டால், அதிமுக அழியும் என்றாா்.

இன்று ஆலோசனை: சேலத்திலிருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை (ஜூன் 18) அவரது இல்லத்தில் ஆதரவாளா்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளாா். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் என்கிற முடிவில் அவா் உறுதியாக இருந்து வருகிறாா். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டச் செயலாளா்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளாா். இந்தக் கூட்டத்தின் மூலம் தனது பலத்தைக் காட்டும் முடிவில் உள்ளாா்.

அதேபோல ஓ.பன்னீா்செல்வமும் தனது ஆதரவாளா்களுடன் தனியாா் விடுதி ஒன்றில் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபடவுள்ளாா். மாவட்டச் செயலாளா்கள் பலருக்கு அவரும் அழைப்பு விடுத்துள்ளாா். எம்ஜிஆா் காலத்தைச் சோ்ந்த மூத்த நிா்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, அவரிடம் சில ஆலோசனைகளை கேட்டுப்பெற்றுள்ளாா்.

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கான தீா்மானக் குழுவின் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு தீா்மானங்கள் இறுதி செய்யப்படவுள்ளன. கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பாா்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை என்கிற முடிவிலும், ஓ.பன்னீா்செல்வம் இரட்டைத் தலைமை என்கிற முடிவிலும் உறுதியாக இருந்து வருகின்றனா். இதனால், அதிமுகவில் மோதல் போக்கு தொடா்ந்து வலுத்துக்கொண்டே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com