9.11 லட்சம் மின் புகார்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி

9.11 லட்சம் மின் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
9.11 லட்சம் மின் புகார்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on
Updated on
2 min read

9.11 லட்சம் மின் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினால் 20.06.2021 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட “மின்னகம்” (மின் நுகர்வோர் சேவை மையம்) இன்றோடு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி இன்று நேரடியாக ஆய்வு செய்து மின்னகம் மேலும் சிறப்பாக செயல்பட துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வுக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- தமிழக மின் நுகர்வோர்களுடைய குறைகளை நீக்கக்கூடிய வகையில், அவர்களுடைய புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு வராலாற்று நிகழ்வாக மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தினை கடந்த 20.06.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மின்னகம் மின் சேவை மையம் இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் முதல்வரின் சிறப்பு திட்டமாக மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்ட மின்னகத்தின் மூலம் 9,16,000 புகார்கள் வரப்பெற்று இருக்கின்றன.

இதில் 9,11,000 புகார்களுக்கு, குறிப்பாக, 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு ஆய்வுப் பணிகளின்போதும், பயணத்தின் போதும் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்னிடம் சொல்வது மின்னகம் ஒரு பயனுள்ளதாக சிறப்பாக அமைந்துள்ளது எனவே முதல்வருக்கு எங்கள் சார்பாக உங்கள் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வரவேற்பை மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மின்னகத்தை மக்களுக்கு வழங்கிய முதல்வருக்கு மின்சார வாரியத்தின் சார்பாக பணிவுடன் நன்றிகளைத் சமர்ப்பித்துக் கொள்கிறோம். வரக்கூடிய ஆண்டுகளில் சிறப்பாக சேவைகளை செய்வதற்காக பல்வேறு முன்னேடுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. செயலி மூலமாக புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காலி பணியிடங்கள் நிதிநிலைகேற்ப, தேவைகளுக்கேற்ப முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரப்பப்படும். 

வட சென்னை அனல் மின் நிலைய நிலை 3 கருணாநிதியால் 2010-ஆம் ஆண்டு 800 மெகாவாட் அளவிற்கு அனல் மின் நிலையத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு முழுவதுமாக நிறைவு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் வணிக ரீதியாக தொடங்கப்படும். எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல 2018-ல் முடிக்கவேண்டியது நான்கு ஆண்டுகள் ஆகியும் முடிவுபெறவில்லை. 53 விழுக்காடு பணிகள் தான் முடிவடைந்துள்ளது.

பணிகளை மிக விரைவாக முடித்து. முதல் யூனிட் மார்ச் 2024-ல் உற்பத்தியை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 2024-ல் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. 
வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த உற்பத்தியை நிறுவுதிறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசை பொறுத்தவரை எரிசக்தி துறை மூலமாகவோ நிலக்கரி துறை மூலமாக நமக்கு தேவையான அளவிற்கு 21.92 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டுமென்று கடிதம் வரப்பெற்றுள்ளது. கடிதம் வருவதற்கு முன்பாகவே முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெண்டர் கோரப்பட்டு இறக்குமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடலில் காற்றாலை மின் உற்பத்தி சம்மந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com