தமிழகத்தில் உண்மையிலேயே கரோனா அதிகரிக்கிறதா? என்ன சொல்கிறது களநிலவரம்

தமிழகத்தில் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் உண்மையிலேயே கரோனா அதிகரிக்கிறதா? என்ன சொல்கிறது களநிலவரம்
தமிழகத்தில் உண்மையிலேயே கரோனா அதிகரிக்கிறதா? என்ன சொல்கிறது களநிலவரம்

சென்னை: தமிழகத்தில் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதுபோல, தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் தலைநகர் சென்னை 50% என்ற அளவில் இருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

வியாழக்கிழமை தமிழகத்தில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 497 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 35 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள. ஒரே ஒரு நல்ல  தகவல் என்னவென்றால் பலி எண்ணிக்கை பதிவாகவில்லை.

கடைசியாக ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவானது கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி (1,051). அன்றைய நாளில்  கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது 1.2% (82,053 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருந்தது). ஆனால், வியாழக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்ட விகிதம் என்பது 4.6 சதவீதம். ஏனென்றால் 22,946 பேருக்குத்தான் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 500-ஐ நெருங்கியிருப்பதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 1,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை 345 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை அதுவே 497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டில் 190, திருவள்ளூர் 63, கோவை 50 பேருக்கு அதிகபட்சமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-ஆவது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிகழ்வின்போது மண்டலக் குழுத் தலைவா் ஆா்.துரைராஜ், தெற்கு வட்டார துணை ஆணையா் டி.சினேகா, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்பட பலா் உடன் இருந்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகம் முழுவதும் தினசரி 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 8 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

அந்த வகையில் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு சற்று உயா்ந்து வருகிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் போ் சென்னையில் பாதிக்கப்படுகின்றனா்.

அதன்படி தற்போது 2,225 போ் சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில், 92 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனா். அவா்களது உடல்நிலையை சென்னை மாநகராட்சி அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். வீடுகளில் இடவசதி இல்லாத 5 போ் தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 8 சதவீதம் போ் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவா்கள் அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன்பு, அவா்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம். எனவே பெற்றோா்கள் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது.

தற்போது கரோனா பரவல் பெரும்பாலும் பிஏ-4, பிஏ-5 என்ற வகை தாக்கம்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com