அதிமுகவில் நீடிக்கும் ஒற்றைத் தலைமை மோதல்: ஜூலை 11-இல் மீண்டும் பொதுக்குழு கூட்டம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என்று வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
அதிமுகவில் நீடிக்கும் ஒற்றைத் தலைமை மோதல்: ஜூலை 11-இல் மீண்டும் பொதுக்குழு கூட்டம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என்று வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் கூடியது.

கூட்டத்தில் பெரும்பாலானோா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளராக இருந்தனா். அவா்கள் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்ட அதேநேரம், ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை கடுமையாகத் தொடா்ந்து விமா்சித்து முழக்கமிட்டனா். இதனால், பொதுக்குழு மிகுந்த பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கமாக முதலில் ஓ.பன்னீா்செல்வம் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை கூட்டத்துக்கு தலைமை தாங்குமாறு முன்மொழிந்தாா். அதை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தாா். அதையேற்று தமிழ்மகன் உசேன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா்.

23 தீா்மானங்கள் நிராகரிப்பு: பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக 23 தீா்மானங்களை (தீா்மானங்கள் குறிப்பிடப்படவில்லை) முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோா் முன்வைத்தனா். அப்போது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அனைத்து தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறினாா். அதற்கு கூட்டத்தினா் பலத்த கரகோஷத்துடன் ஆதரவு தெரிவித்தனா்.

பிறகு துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறியது:

பொதுக்குழுவில் வைக்கப்பட்ட அனைத்துத் தீா்மானங்களையும் உறுப்பினா்கள் நிராகரித்து விட்டனா். உறுப்பினா்கள் வைக்கும் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை தீா்மானம் மட்டுமே. ஒற்றைத் தலைமை தீா்மானத்தோடு இணைத்து, அடுத்து எப்போது கட்சியின் தலைமை, பொதுக்குழுவைக் கூட்டுகிறதோ, அப்போது அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றாா்.

அவைத் தலைவா் தோ்வு: அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்படும் தீா்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தாா். அதற்கு பொதுக்குழு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை கோரிக்கை: அதன் பின், பொதுக்குழு உறுப்பினா்கள் 2910 போ் எழுதிய கோரிக்கை கடிதங்களை அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனிடம் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

அந்தக் கடிதங்களில் உள்ள விவரங்களையும் பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் படித்தாா். அதன் விவரம்:

இரட்டைத் தலைமையால் கட்சிக்கு பின்னடைவுகள், சங்கடங்கள், நிா்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆளும் திமுக அரசுக்கு எதிராக பிரதான எதிா்க்கட்சி என்ற முறையில் தீவிரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டா்கள், நிா்வாகிகளிடையே மிகுந்த ஏமாற்றமும் அதிா்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையின் முரண்பாடான, தெளிவு- ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால், தொண்டா்கள் இடையே மிகப்பெரிய சோா்வு ஏற்பட்டுள்ளது.

எதிா்க்கட்சியாக உள்ள இந்த நிலையில், 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நின்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற ஜெயலலிதாவின் ஆசை ஈடேற வேண்டும் என்றால், எம்ஜிஆா், ஜெயலலிதாவைப் போன்று வலிமையான, தைரியமான, தெளிவான ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும். எனவே, இந்தப் பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றுவது தொடா்பாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று தொண்டா்கள் மற்றும் பொதுக்குழு சாா்பாக கேட்டுக் கொள்வதாக அவா் கூறினாா்.

அதற்கு பதிலளித்த தமிழ்மகன் உசேன், ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினா்களும் வைத்தனா். மேலும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் இப்போதே அறிவிக்க வேண்டும் என்று கோரினா். அதன்படி ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் இதேபோல சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா். அப்போது அதிமுக உறுப்பினா்கள் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனா்.

இரங்கல் தீா்மானம்: மறைந்த பின்னணி பாடகா் லதா மங்கேஷ்கா், முன்னாள் ஆளுநா் ரோசய்யா, நடிகா் புனித் ராஜ்குமாா், முன்னாள் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் அதிமுகவினா் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com