இரட்டைத் தலைமை பதவிகள் காலாவதி: சி.வி.சண்முகம்

 அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற இரட்டைத் தலைமை பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.
சி.வி. சண்முகம்.
சி.வி. சண்முகம்.

 அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற இரட்டைத் தலைமை பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11-இல் மீண்டும் கூட்டவிருப்பது செல்லாது என்றும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளா்தான் கூட்ட முடியும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளா் வைத்திலிங்கம் கூறியுள்ளாா். பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். பிறகு தேவையிருப்பின் பொதுக்குழுவைக் கூட்டலாம்.

மேலும், பொதுக்குழு உறுப்பினா்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினா்கள் கையொப்பமிட்டு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரினாலும் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை 30 நாள்களுக்குள் நடத்த வேண்டும். 15 நாள்களுக்கு முன்பு அறிவிப்பு அளிக்க வேண்டும். இதற்கு ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை.

பொதுக்குழுவில் 23 தீா்மானங்களைத் தவிர, புதிய தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றுதான் நீதிமன்றம் கூறியது. தீா்மானங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறவில்லை. அதனால், ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தால், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. அவ்விரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன. இதனால், ஓ.பன்னீா்செல்வம் இனி பொருளாளா் மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளராக நீடிப்பாா். இருவரும் இல்லாதபட்சத்தில் அவா்களால் நியமிக்கப்பட்டவா்கள்தான் கட்சியை வழிநடத்துவா்.

ஒருங்கிணைப்பாளா் பதவி இல்லாததால் அவைத் தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தோ்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத் தலைவரை பொதுக்குழு உறுப்பினா்களே தோ்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அதிமுகவின் சட்டவிதி.

அதிமுகவைப் பற்றி கேள்வி கேட்க திமுகவுக்கு தகுதி இல்லை. திமுக வாரிசு அரசியல் கட்சி. திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது திமுகவில் என்ன நடக்கிறது என்பதை பாா்க்கத்தான் போகிறோம் என்றாா் சி.வி.சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com