
ஊழல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அரசு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் -முறைகேடுகள் குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய 10-க்கும் மேற்பட்ட அரசு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல்தடுப்பு- கண்காணிப்புத் துறை 2021 நவம்பா் மாதமே அனுமதி கேட்டிருப்பதாகவும், தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களின் வரிப்பணம் விரயமாவதற்கும், ஊழல்-முறைகேடுகளுக்கும் துணைபோன அதிகாரிகள் மீது கடந்த பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் வந்தபோதும் அவா்கள் தண்டிக்கப்படுவதில்லை என்கிற நிலையே நீடிக்கிறது. அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவா்களே தவிர அமைச்சா்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைபோக வேண்டியவா்கள் அல்ல. இது கடுமையான குற்றமாகும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஊழல் - முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதியளிப்பதற்கும், முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை விரைவுபடுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.