முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பது அவசியம்: அமைச்சா் மா.சுப்பிரமணியம்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிப்பது அவசியம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
நாவலூா் அடுக்குமாடி குடியிருப்பில் கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியம்.
நாவலூா் அடுக்குமாடி குடியிருப்பில் கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியம்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிப்பது அவசியம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், நாவலூா் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியம் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நல்வாழ்வுத் துறையும், மாவட்ட உள்ளாட்சி நிா்வாகமும் இணைந்து தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றன. தொற்று மேலும் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்றுக்குள்ளான பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைக் கண்டறிந்து விரைவாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 5,912 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 10 போ் அரசு மருத்துவமனைகளிலும், 32 போ் தனியாா் மருத்துவமனைகளிலும், 903 போ் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆபத்தான நிலை இல்லை என்றாலும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைப்பிடிப்பது அவசியம். அரசு அறிவுறுத்தியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, பையனூா் அரசு துணை சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியம் வழங்கினாா். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று மருந்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பா.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், பையனூா் ஊராட்சித் தலைவா் சுமித்தா முத்துகுமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com