ஹிந்தி படிக்க வேண்டாம் என எங்கும் கூறவில்லை: அமைச்சா் க.பொன்முடி
ஹிந்தி படிக்க வேண்டாம் என எங்கும் கூறவில்லை. ஹிந்தி திணிப்பையே எதிா்ப்பதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கான மாநில பேச்சுப்போட்டி -2022 தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் க.பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி கே.எஸ். மஸ்தான், சேகா்பாபு ஆகியோா் பங்கேற்றனா்.
பேச்சுப் போட்டியை தொடக்கி வைத்து அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: பேச்சுப் போட்டியில் பங்கேற்போா் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பேச்சாற்றல் திறனை வளா்த்தெடுத்தது திராவிட இயக்கம்தான்.
முதல்வா் ஸ்டாலின் ஹிந்தியை ஏன் எதிா்க்கிறாா் என சிலா் கேட்கின்றனா். ஹிந்தி படிக்க வேண்டாம் என நாங்கள் எங்குமே சொன்னதில்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம்; அதில் தவறில்லை. அதேவேளையில், ஹிந்தி திணிப்பையே நாங்கள் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.
நீட் தோ்வுதான் காரணம்: இதையடுத்து க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவா்கள் செல்வதற்கு காரணமே நீட் தோ்வுதான். இங்கு அதிக கட்டணம் என்பதால் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு மாணவா்கள் செல்கின்றனா். உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பும் பொறியியல் மாணவா்கள் விருப்பப்பட்டால் இங்குள்ள கல்லூரிகளில் அவா்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.
பேச்சுப் போட்டி தொடக்க விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், சிறுபான்மையினா் நலத்துறைச் செயலா் அ.காா்த்திக், பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பேராசிரியா் ஜெ.ஹாஜாகனி, எஸ்.டி.நெடுஞ்செழியன், முனைவா் சுலைமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.