நீட் ரத்து உடனடி இலக்கு; உக்ரைன் சூழல் வலுவான காரணம்: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உக்ரைன் சூழல் மேலும் ஒரு வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீட் தேர்வு ரத்து உடனடி இலக்கு என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் ரத்து உடனடி இலக்கு; உக்ரைன் சூழல் வலுவான காரணம்: மு.க. ஸ்டாலின்


நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உக்ரைன் சூழல் மேலும் ஒரு வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீட் தேர்வு ரத்து உடனடி இலக்கு என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷியப் படைகள் தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏராளமான இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனிலிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உக்ரைனில் ரஷிய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இவரது இழப்பு, கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரலை எழுப்பியது. 12-ம் வகுப்புத் தேர்வில் 97 சதவிகித மதிப்பெண்கள் பெற்றபோதிலும், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததன் காரணத்தினாலேயே அவர் உக்ரைன் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருக்கிறார்.

இதையொட்டி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"பிளஸ் 2 தேர்வில் 97 சதவிகித மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து , அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால், வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது பரப்புரை செய்வதற்கோ, விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய தருணம்.

மாணவர்களின் ஆர்வத்தையும், பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஏட்டிக்குப் போட்டியான பேட்டிகளையும் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும் பாஜகவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் முக்கியக் கடமையாகும்.   
நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இள்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com