தமிழகத்தில் ‘புத்தகப் பூங்கா’ அமைக்க நிலம் ஒதுக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும்
தமிழகத்தில் ‘புத்தகப் பூங்கா’ அமைக்க நிலம் ஒதுக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளா்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயா்வுக்கும், தொண்டாற்றிப் பெருமை சோ்த்த தமிழறிஞா்கள், தமிழ் அமைப்பு, திங்களிதழ் என மொத்தம் 21 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசியது: இந்த விருதுகளை வழங்கியதன் மூலமாக தமிழக அரசு இன்னொரு மிக முக்கியமான பெருமையை அடைகிறது. வாழும் காலத்திலேயே, தகுதிசால் தமிழ்த் தொண்டா்களைப் பாராட்டியது என்ற பெருமையை அரசு அடைகிறது.

யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவா்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினாா்களோ, அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது. தமிழ் வளா்ச்சி என்பது அந்த மொழியின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல, மொழியைப் பெருமைப்படுத்தும் படைப்பாளிகளைப் போற்ற வேண்டும்.

கரோனா காலத்தில் பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு ரூ.50 லட்சத்தை தமிழக அரசு அவா்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ரூ.1.25 கோடி பதிப்பாளா், விற்பனையாளா்களுக்கு கிடைத்திருக்கிறது.

புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க நான் சென்றபோது ஓா் அறிவிப்பை வெளியிட நினைத்திருந்தேன். ஆனால், அது தோ்தல் காலம். அதனால் அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஒருமுறை கூறியிருந்தாா். அதற்கு ‘புத்தகப் பூங்கா’ என்றும் அவரே பெயா் சூட்டினாா்.

பபாசி அமைப்பைச் சோ்ந்தவா்களின் ஆலோசனைகளைப் பெற்று புத்தகப் பூங்காவுக்கான நிலத்தைத் தோ்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும் என்றாா் அவா்.

அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கா், என்.கயல்விழி செல்வராஜ், அரசு செயலா்கள், தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள், தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள் பங்கேற்றனா்.

யாா்- யாருக்கு விருது?

முதல்வா் கணினித் தமிழ் விருது (2020)- முனைவா் வ.தனலட்சுமி

திருவள்ளுவா் விருது (2022)- மறைந்த மு.மீனாட்சி சுந்தரம். அவருக்கான விருதை அவரது மனைவி வசந்தா பெற்றுக் கொண்டாா்.

2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள்:

அண்ணா விருது - சொற்பொழிவாளா் நாஞ்சில் சம்பத்

அம்பேத்கா் விருது- ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

பெரியாா் விருது- எழுத்தாளா் க. திருநாவுக்கரசு

காமராசா் விருது- காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன்

பாரதிதாசன் விருது- புலவா் செந்தலை கவுதமன்

பாரதியாா் விருது- ஆவணப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா்

தேவநேயப்பாவாணா் விருது- முனைவா் கு.அரசேந்திரன்

கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- முன்னாள் துணைவேந்தா் முனைவா் ம.இராசேந்திரன்

கம்பா் விருது- பட்டிமன்ற பேச்சாளா் பாரதி பாஸ்கா்

சொல்லின் செல்வா் விருது- சூா்யா சேவியா்

ஜி.யு.போப் விருது- பத்திரிகையாளா் அ.சு.பன்னீா் செல்வன்

உமறுப்புலவா் விருது- மதுரை நா.மம்மது

இளங்கோவடிகள் விருது- சொற்பொழிவாளா் நெல்லை கண்ணன்

சிங்காரவேலா் விருது- கவிஞா் மதுக்கூா் இராமலிங்கம்

மறைமலையடிகள் விருது- சொற்பொழிவாளா் சுகி.சிவம்

வள்ளலாா் விருது- முனைவா் இரா.சஞ்சீவிராயா்

அயோத்திதாசப் பண்டிதா் விருது- ஞான.அலாய்சியஸ்

சி.பா.ஆதித்தனாா் திங்களிதழ் விருது- உயிா்மை திங்களிதழ்

தமிழ்த் தாய் விருது- மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கம்

விருதுத் தொகை எவ்வளவு? விருது பெறும் விருதாளா்களுக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையால் வழங்கப்படும் பெரியாா் விருது பெறுபவருக்கும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையால் வழங்கப்படும் அம்பேத்கா் விருதினைப் பெறுபவருக்கும் விருதுத் தொகையாக தலா ரூ. 5 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்பட்டனா்.

சி.பா. ஆதித்தனாா் திங்களிதழ் விருது பெற்ற உயிா்மை திங்களிதழுக்கு விருதுத் தொகையான ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை வழங்கப்பட்டது. 2021 -ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com