
தமிழகத்தில் இனி அடிக்கடி மின்வெட்டு ஏற்படலாம் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2019-இல் எண்ணூா் அனல் மின் நிலையத் திட்டம் தொடா்பாக பிஜிஆா் எனா்ஜி நிறுவனத்திடம் தமிழக அரசின் டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்தது. ஆனால், அந்த நிறுவனத்திடம் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆா் எனா்ஜி நிறுவனத்திடம் மீண்டும் தமிழக அரசு தற்போது ஒப்பந்தம் செய்து இருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் இதுபோன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான். அதனால், தமிழகத்தில் மீண்டும் அடிக்கடி மின்வெட்டு வரலாம் என்றாா் கே.அண்ணாமலை.