ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்புகள்! பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ. 190 கோடி

சமத்துவம் தழைக்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். 
ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்புகள்! பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ. 190 கோடி

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

பேரவையில் பேசிய நிதியமைச்சா் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். 

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2016, 2020 ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 1,77,922 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக வழங்கப்படும் 70,000 ரூபாய் உட்பட ஆண்டு தோறும் வீடு ஒன்றிற்கு மொத்தம் 1,68,000 ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது.

2021-22 ஆம் ஆண்டில் 2,30,788 புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக,4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டமைப்புப் பற்றாக்குறையை நிறைவு செய்து, கிராமங்களை பன்முக வளர்ச்சியடையச் செய்வது, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்– II ன் குறிக்கோளாகும். 

வரும் ஆண்டில், 1,455 கோடி ரூபாய் செலவில் 2,657 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசின் முன்னோடித் திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சமத்துவம் தழைக்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

பிரதமரின் கிராம சாலைத் திட்டம் III-ன்கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை 221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை தற்காலத்திய தொழில்நுட்ப பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப, திறன்மிகு சுய உதவிக் குழுக்களாக (Smart SHG) மேம்படுத்த முன்னோடி பயிற்சித் திட்டமாக (pilot training basis)மதுரையில் தொடங்கப்படும். தமது முன்னேற்றத்துடன் தாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்காற்றும் வகையில் சுய உதவிக் குழுக்களை மெருகேற்றிட பயிற்சி வழங்கப்படும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாயும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 26,647.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com