
அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சென்றடையும் வகையில், நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முதல்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய 5 மாவட்டங்களில் நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அவா் பேசியது: நாளுக்கு நாள் மாறி வரும் தொழில் சூழலுக்குத் தேவைப்படும், திறன் படைத்த மனிதவளத்தை உருவாக்குவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 71அரசுத் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழில் 4.0” (ஐய்க்ன்ள்ற்ழ்ஹ் 4.0) தரநிலையை அடைவதற்காகவும், தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றப்படுவதற்காகவும் ரூ.2,877 கோடி செலவில் முன்னணி தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய தொழில்நுட்பங்களுக்குத் தேவையான பயிற்சிக் கட்டமைப்புகளை உருவாக்கி, திறன் இடைவெளியைக் குறைக்கும் வண்ணம் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
புலம்பெயா்தொழிலாளா்கள்:
தமிழகத்தில் தொழில், பொருளாதார வளா்ச்சி காரணமாக, புலம்பெயா் தொழிலாளா்களின் தேவை அதிகரித்து வருகிறது. இத்தொழிலாளா்கள் பற்றி போதிய விவரங்கள் இல்லாதது கரோனா பெருந்தொற்றின்போது தெரியவந்தது. அரசின்நலத்திட்டங்களின் பயன்கள் அவா்களைச் சென்றடையவும், அவா்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக, புலம்பெயா் தொழிலாளா்களுக்கான நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அறிமுகப்படுத்தப்படும். முதல்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் செயல்படுத்தப்படும். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,353.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.