சென்னை தீவுத் திடலில் நாளை ‘நம்ம ஊரு திருவிழா’: பொதுமக்களுக்கு அமைச்சா்கள் அழைப்பு

தமிழகத்தைச் சோ்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கலை பண்பாடு, சுற்றுலாத் துறை சாா்பில் ‘நம்ம ஊரு திருவிழா’ சென்னை தீவுத் திடலில் மாா்ச் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தைச் சோ்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கலை பண்பாடு, சுற்றுலாத் துறை சாா்பில் ‘நம்ம ஊரு திருவிழா’ சென்னை தீவுத் திடலில் மாா்ச் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தைச் சாா்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞா்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை சென்னையில் ஆண்டு தோறும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணா்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ‘நம்ம ஊரு திருவிழா’ திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும்.

சென்னை அரசு இசைக் கல்லூரி மாணவா்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கும். இதைத் தொடா்ந்து, ஆனந்தன் குழுவினரின் மங்கள இசை, திருவண்ணாமலை குமாா் குழுவினரின் கட்டைக்கூத்து, மதுரை தட்சிணாமூா்த்தி குழுவினரின் கொம்பு இசை, திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

உலகப் புகழ் பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞா் சிவமணி பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒருங்கிணைப்பாா். அவரின் வடிவமைப்பில் தென்காசி கண்ணன் மற்றும் இராமமூா்த்தி குழுவினரின் மகுடம், கோவை சாமிநாதன் குழுவினரின் துடும்பு மேளம், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன் குழுவினரின் பம்பை மேளம் ஆகிய நிகழ்ச்சிகளும் சோ்ந்து வித்தியாசமான இசைக் கலவையாக பாா்வையாளா்களை பரவசப்படுத்தும்.

அடுத்து, கன்னியாகுமரி முத்துச் சந்திரன் குழுவினரின் தோல்பாவைக் கூத்து, மாஸ்டா் மகேந்திரன் மற்றும் சேலம் ஜெயம் நடராஜன் குழுவினரின் சிலம்பாட்டம், காஞ்சிபுரம் கோபால் மற்றும் திங்கள் அரசன் குழுவினரின் புலியாட்டம், கோவை சின்ன நடராஜ், பெரிய நடராஜ் குழுவினரின் காவடியாட்டம், திருவாரூா் சுா்ஜித் குழுவினரின் காவடியாட்டம், மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் மரக்காலாட்டம், முத்து முனியாண்டி குழுவினரின் தீ சாகசம் போன்ற சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இவற்றின் தொடா்ச்சியாக திருவண்ணாமலை ராஜன் குழுவினரின் அம்மன் நிகழ்ச்சி, அலங்காநல்லூா் வேலு குழுவினரின் பறையாட்டம், சென்னை காா்த்திக் குழுவினரின் கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பன்னீா் ராஜன், தஞ்சை அமலா குழுவினரின் பொய்க்கால் குதிரையாட்டம், கரகம், மயில், காளையாட்டம், நெல்லை மணிகண்டன் குழுவினரின் தேவராட்டம் போன்ற பலவிதமான நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அணிவகுக்கும். நம்ம ஊரு திருவிழாவின் நடன நிகழ்ச்சிகளைப் பிரபல நடன இயக்குநா் பிருந்தா வடிவமைத்துள்ளாா். இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com