தமிழ்நாட்டில் வேலையின்மை என்பதே இல்லாத நிலையினை உருவாக்க வேண்டும்: முதல்வர்

தமிழ்நாட்டில் வேலையின்மை என்பதே இல்லாத நிலையினை உருவாக்க வேண்டும்: முதல்வர்

தமிழ்நாட்டில் வேலையின்மை என்பதே இல்லாத நிலையினை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வேலையின்மை என்பதே இல்லாத நிலையினை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது, இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இன்று வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 36 பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் - வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இரண்டு தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.

இது வரை நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 5,708 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2,50,708 பேர் வேலைவாய்ப்புகளை நாடி வந்தார்கள். அவர்களில் 41 ஆயிரத்து 213 பேர் வேலை கிடைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், 517 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மாவட்டமாக இந்த செங்கல்பட்டு மாவட்டம் துவக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு உரிய பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் பெறும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வேளையில் நான் மூன்று வேண்டுகோள்களை உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவேண்டும். அதைத்தான் அந்தப் பொறுப்பிற்குரிய அமைச்சராக இருக்கின்ற கணேசனை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இரண்டாவதாக, சொல்ல வேண்டுமென்றால், இந்த முகாம்களில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள். “நான் முதல்வன்” திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தமிழ்நாட்டினுடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், திறன் பயிற்சியும் வழங்கி தமிழ்நாட்டில் வேலையின்மை என்பதே இல்லாத நிலையினை உருவாக்க அயராது உழைக்குமாறும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திட கைகொடுக்குமாறும் உங்களை வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.


மூன்றாவதாக, இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று வேலை பெற்ற இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு பெறமுடியாத இளைஞர்களுக்குமான ஒரு வேண்டுகோள். வேலை பெற்றவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டும்.
வேலையைப் பெற முடியாதவர்கள் சோர்ந்து போகாமால், கவலைப்படாமல் நீங்கள் அயர்ந்து அதில் உங்கள் கவனத்தை செலுத்தவிடாமல், வேலைவாய்ப்புத் திறன்களை நீங்கள் வளர்த்துக்கொண்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com