ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபை விளங்குகிறது: முதல்வர் ஸ்டாலின் 

ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபை விளங்குகிறது: முதல்வர் ஸ்டாலின் 

ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபை விளங்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபை விளங்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபையில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஆற்றிய உரை, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தன்னம்பிக்கை மொழியை ஏற்று துபைக்கு குடிபெயர்ந்து இந்த மண்ணையும் வளமாக்கியுள்ள எனது தமிழ்ச் சொந்தங்களே!
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு முன் எப்போதையும் விட இப்போது வலுவாக வளர்ந்து வருகின்றது. தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் நம் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இந்த அரங்கில் பெருமளவில் நீங்கள் இங்கு கூடி இருப்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்துள்ளது.
ஓர் அழகான நகரத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள். துபை மிக அழகான நகரம் மட்டுமல்ல, வர்த்தகம் அதிகம் நடைபெறக்கூடிய நகரமாகவும் அமைந்திருக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த இந்த துபை, இன்று உலகமே வியந்து பார்க்கும் நகரமாக வளர்ந்திருக்கிறது.
இன்று நவீன கட்டடக்கலை சாதனைகளுடன் உலகளாவிய வணிக மையமாக மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.
உங்கள் ஊரின் புகழை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், நான் அறிந்தும் தெரிந்தும் வைத்திருப்பதை உங்களுடன் மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துத்தான் என்னுடைய உணர்வுகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
* 2217 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான புர்ஜ் கலிபா,
* செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜீமேரா தீவு,
* 5.5 கி.மீ நீளம் கொண்ட உலகிலேயே மிக நீளமான தங்கச் சங்கிலி,
* மிகப்பெரிய மால்கள்,
* மிகப்பெரிய மீன்காட்சியகம்,
* மலர் பூங்கா என துபையில் பார்க்கும் இடமெல்லாம் பிரமிப்பாகவும் அழகாகவும் இருக்கிறது.
* பறக்கும் கார்கள் முதல் தானியங்கி ரயில்கள் வரை உயர் தொழில்நுட்பப் போக்குவரத்தில் தலைசிறந்து துபாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
* துபையின் அழகைக் கண்டு ரசிக்க ஆண்டு தோறும் சராசரியாக 17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எல்லா நாடுகளிலிருந்தும் வருகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் துபை இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தத் தான் நான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டி உங்களைத் தேடி, நாடி நான் வந்திருக்கின்றேன்.
முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபிறகு, நான் மேற்கொள்ளக்கூடிய முதலாவது அயல்நாட்டுப்பயணம் இந்தப் பயணம் தான், இந்த துபை பயணம்
தான். இந்த முதல் பயணமும் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபை நகரமாக அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய
வர்த்தகப் பங்குதாரர்களில் ஒன்றாகவும், ஏற்றுமதிகளுக்கான மிகப்பெரிய நுழைவாயிலாகவும் துபை விளங்குகிறது.
துபை மக்கள், ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் சட்டத்தை மதிக்கக்கூடிய நற்பெயரைப் பெற்றவர்கள். அதனால் தான் உங்களை நாடி நான் வந்திருக்கிறேன்.

ஐக்கிய அரபு நாடுகளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பணியாற்றியும், வணிகம் செய்தும் வருகின்றனர். தமிழர்களின் கடின உழைப்பு
மற்றும் விடாமுயற்சி, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே,
துபையை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடாகவும் இது இருக்கிறது.
தமிழ்நாடு, வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்த ஒரு மாநிலம். கிட்டத்தட்ட ஏழரைக் கோடி மக்களைக் கொண்டிருக்கக்கூடிய மாநிலம். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்காக, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை தயார்படுத்துதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில், நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com