புலியூர் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் குறிப்பிட்ட நேரத்திற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
அறையை விட்டு வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கலாராணி
அறையை விட்டு வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கலாராணி

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் குறிப்பிட்ட நேரத்திற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடத்தவிடாமல் தடுப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரும், தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான கலாராணி குற்றம்சாட்டியுள்ளார். 

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக கூட்டணி 13 வார்டுகள், சுயேட்சை 1 வார்டு, பிஜேபி 1 வார்டு வெற்றி பெற்றிருந்தது. புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், போட்டியின்றித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுக உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருந்தனர். இதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றுள்ள திமுக உறுப்பினர்கள் ஏற்றுள்ள பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து 08.03.2022 அன்று புலியூர் பேரூராட்சித் தலைவராக பொறுப்பேற்று இருந்த திமுக உறுப்பினர் புவனேஸ்வரி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து இன்று புலியூர் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 9.30 மணியளவில் துவங்கியது. தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்திற்கு தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி, துணைத் தலைவர் அம்மையப்பன், பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே வந்தனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

15 உறுப்பினர்களைக் கொண்ட புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கலாராணி, திமுகவைச்  சேர்ந்த துணைத் தலைவர் அம்மையப்பன், பாஜக உறுப்பினர் விஜயகுமார் ஆகிய மூன்று பேர் மட்டுமே தேர்தலுக்கு வருகை புரிந்தனர்.

11 திமுக உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தேர்தலை புறக்கணிப்பு செய்ததால் மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன் தடையாக இருப்பதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் எனவும் வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com